நண்பர்களே பகுத்தறிவு மாதம் பிறந்துவிட்டது.
தமிழரிடைய பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பிய பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடுவோம். இந்த மாதம் முழுதும் பகுத்தறிவு கருத்துக்களை பற்றி சிந்திப்போம். இதில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் சமூக வலைத்தள பதிவுகளுக்கு #paguththarivumaadham என்ற hastagஐ பயன்படுத்தவும்.
பெரியார் சொல்லிவிட்டதால் அவர் சொல்வதனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை. அவர் கருத்துக்களை தராளமாக விமர்சனம் செய்யுங்கள். பெரியார் மட்டுமல்ல எந்த ஒரு அறிஞரும் சொன்ன கருத்துக்களை 100% ஏற்றுக்கொள்ள முடியாது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற குறள் சொல்வதுபோல் நாம் நம் அறிவைப் பயன்படுத்தி உண்மையை பகுத்தறியவேண்டும்.
ஏன் உலகப்பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறளிலேயே விமர்சிக்கப் படவேண்டி விசயங்கள் உள்ளன். திருக்குறளில் உள்ள பெண்ணடிமை கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்ளுங்கள் அவரிடம் விமர்ச்சிப்படவேண்டிய விசயங்கள் பல உள்ளன. அதற்காக காந்தியாரின் தியாகத்தையும், அகிம்சை கொள்கையையும் போற்றாமல் இருக்க முடியாது.
நமக்கு சொல்லப்படுகிற விசயங்களை நம் அறிவு கொண்டு ஆய்ந்து சரி என்று நமக்குப்படுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பகுத்தறிவு. இது தான் மனித இனத்திற்குத் தற்போதைய தேவை. ஒரு நிமிடம் உலகில் இதுவரை நடந்த கொடுமைகள், மற்றும் தற்போது நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் நினைத்துப்பாருங்கள்.
அவை எல்லாம் ஒருவகையில் மனிதன் பகுத்தறிவை இழந்ததால் சில மூடக்கருத்துக்களை கேள்வி கேட்காமல் ஏற்றதால் நிகழ்ந்த கொடுமைகளாகத்தான் இருக்கும். மனிதகுலம் அறிவார்ந்த சமூதாயமாக மாறும் போது அமைதியான சமூகமாக மாறும். சிந்தியுங்கள் நண்பர்களே.
பகுத்தறிவு மாத சிந்தனையை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உரையோடு தொடங்குவோம். மரபு சார்ந்த விசயங்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி கேட்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒரு தமிழச்சி சொல்வதை கேளுங்கள்.