Monday, November 14, 2016

முதல் அழைப்பு

20 பேர் அமரக்கூடிய அறை அது.  நாங்கள் சுமார் 12 பேர் 'ப' வடிவிலுள்ள ஒரு மேசைக்குப் பின் அமர்ந்து பேச்சாளரின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தோம். இது நடந்தது 2014ஆம் வருடத்தின் பிற்பகுதியில்.

ஸ்பிரிங்ஃபீல்டு லேக்ஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் என்றழைக்கப்படும் பேச்சாளர்கள் சங்கத்தின் மாதமிருமுறை நடக்கும் அமர்வுதான் அன்று நடந்து கொண்டிருந்தது.

பேச்சுக்கலையை வளர்த்துக்கொள்ள விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளவை இந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் சங்கங்கள். (இந்த சங்கங்கள்பற்றி அறிந்து கொள்ள இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும் https://www.toastmasters.org/ )

எங்க வீட்டருகே ஒரு டோஸ்ட்மாஸ்டர்ஸ் சங்கம் இருந்ததால் எனக்கு வசதியாக இருந்ததது. நான் அவர்கள் கூட்டத்திற்கு அவ்வப்போது செல்வதுண்டு. வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது புதன்கிழமைகளில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும். இரவு 9:00 மணிக்கு கூட்டம் முடிவுற்றாலும், அதன் பிறகு பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு வர 10 மணியாகும். பெரும்பாலும் நான் வீட்டுக்கு வரும்போது என்னுடைய 5 வயது மகன் தூங்கியிருப்பான்.

அன்று பேசிய பேச்சாளர் எந்த தலைப்பில் உரை நிகழ்த்தினார் என்று நினைவில்லை ஆனால் வழக்கம்போல் நான் உரையில் லயித்திருந்திருந்தேன். என்னுடைய மொபைல் போன் அமைதியாக எனக்கு முன் மேசையில் லேசாக ஒளிர்ந்து எனக்கு உள்வரும் அழைப்பைப் பற்றி உணர்த்தியது. யாரென்று பார்த்தேன். அழைப்பு வீட்டிலிருந்து என்று அறிந்தேன்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் கூட்டத்திலிருக்கும்போது போன் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். அப்படியிருந்தும் ஏன் மனைவி அழைத்தார் என்று எண்ணியவாறே, அப்போதைக்கு அழைப்பை துண்டித்துவிட்டு, சற்று நேரம் கழித்து பேச்சு முடிந்தவுடன், என்ன விசயம் ஏன் அழைத்தாய் என்று மனைவிக்கு வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பினேன். சற்று நேரத்தில் ஒன்றுமில்லை நீங்கள் மீட்டிங் முடித்துவிட்டு பிறகு சொல்கிறேன் என்று பதில் வந்தது.

அதன் பிறகு அதைப்பற்றி ஒன்றும்  யோசிக்காமல் கூட்டம் முடிந்து வீட்டுக்கு வழக்கம் போல் 10 மணி வாக்கில் சென்றடைந்தேன்.

மீட்டிங்கில் இருக்கும்போது எதற்கு அழைத்தாய் என்று மனைவிடம் விசாரித்தேன். அதற்கு அந்த தொலைபேசி அழைப்பை செய்தது முகில் என்றார். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முகில் இன்னும் தொலைபேசி பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. எப்படி தொலைபேசியை உபயோகிக்க வேண்டும் என்று ஒருமுறை நாங்கள் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ஆனால் அதன் பிறகு அவன் அதை பயன்படுத்தியதே இல்லை. அப்படி இருக்க ஏன் என்னை அழைத்தான் ?

என்ன நடந்தது என்றால்...
 வழக்கம் போல் 7 மணிக்கு எல்லால் முகில் சாப்பிட்டுவிட்டு பல் துலக்கிவிட்டு தூங்க சென்றுவிடுவது வழக்கம். அதே போல் அன்று பல் துலக்க சென்றிருக்கிறார். அப்போது என் மனைவி, பக்கத்துவீட்டில் சில பாத்திரங்களை கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அம்மா சொன்னதை முகில் கவனிக்கவில்லை.

எங்க பக்கத்துவீட்டில் குடியிருப்பவர்களும் இந்தியர்கள்தான். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு நன்றாக தெரியும். இங்கு ஆஸ்திரேலியாவில் பக்கத்து வீட்டில் தமிழ் தெரிந்தவர்கள் எங்களுக்கு கிடைத்தது பலவகையில் உதவியாக இருக்கிறது. அவ்வப்போது அவர்கள் வீட்டிலிருந்து பிசிபேளா பாத் போன்ற கர்நாடக சாப்பாடும் எங்க வீட்டிலிருந்து இட்லி, பொங்கல் குழிப்பணியாரம் போன்ற தமிழ் சாப்பாடும் பறிமாறப்படும் ;)  அப்போது என் மனைவி கருவுற்றிருந்ததால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பக்கத்து வீட்டு சமையல் எங்க வீட்டிற்கு வந்து கொண்டிருந்தது.

மனைவி உணவு பாத்திரங்களை கொடுத்துவிட்டு உடனே திரும்பவேண்டும் என்ற நோக்கத்தில் சென்றவர், அவர்கள் ஏதோ முக்கிய விசயம் பற்றி கேட்க பதில் சொல்லிவிட்டு வர சற்று கால தாமதமாகிவிட்டிருக்கிறது. அதுவும் சுமார் 10 நிமிடம்தான் இருக்கும் என்றார்.

அதற்குள் முகில் பல் துலக்கிவிட்டு குளியலைவிட்டு வெளியே வந்திருக்கிறான். அம்மா பக்கத்து வீட்டுக்கு சென்றிருப்பதை பற்றி தெரியாமல், அம்மாவை கூப்பிட்டிருக்கிறான். பதில் வரவில்லை என்றவுடன் வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்திருக்கிறான்.

அம்மாவை  காணவில்லை என்று அறிந்து பயந்துவிட்டான்.  முதல் வேலையாக பின் கதவை சென்று பூட்டிவிட்டு வந்துவிட்டான். முன் கதவு ஏற்கனவே மனைவி சாத்திவிட்டு சென்றிருக்கிறார்.  ஏற்கனவே எங்கள் இருவர் தொலைபேசி எண்களை ஒரு தாளில் எழுதி அவனுக்கு தெரியும் இடத்தில் நாங்கள் வைத்திருக்கிறோம். அதேபோல் தொலைபேசி எண்களை அவனுடைய பள்ளி புத்தகப் பையிலும் வைத்திருக்கிறோம்.

உடனே தொலைபேசி எண்கள் எழுதிய தாளை எடுத்து வீட்டுத் தொலைபேசியின் வழியாக அம்மாவின் எண்ணுக்கு ஒவ்வொரு பொத்தானாக அமுக்கி அழைத்திருக்கிறான். ஆனால் அம்மாவின் தொலைபேசியின் அழைப்பு ஒலி வீட்டிற்குள்ளே இருந்து வந்திருக்கிறது.

அம்மா தொலைபேசி வீட்டிலேயே இருந்ததால் என்னுடைய தொலைபேசி எண்ணை ஒவ்வொன்றாக அமுக்கி அழைத்திருக்கிறான். அப்படி அழைத்த அவன் முதன் அழைப்பைத்தான் நான் டோஸ்ட்மாஸ்டர்ஸ் மீட்டிங்கில் இருக்கும் போது துண்டித்திருக்கிறேன்.

பிறகு என்ன செய்வதென்று அறியாமல் வீட்டிற்குள்ளேயே தனியாக அழ ஆரம்பித்திருக்கிறான்.  சற்று நேரத்திற்குள் என் மனைவி வீட்டிற்கு வந்துவிட்டார். அவனை சமாதானம் செய்து தூங்க வைத்திருக்கிறார்.

ஏன் பின் கதவுகளை பூட்டினாய் என்ற மனைவி கேட்டிருக்கிறாள் அதற்கு மோசமான ஆளுங்க பின் கதவு வழியாக வந்துவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறான்.

இந்த விசயத்தை மனைவிடம் கேட்டுவிட்டு மகன் அறையின் கதவை சற்று திறந்து பார்த்தேன். அமைதியாக ஒருக்களித்துபடுத்து தூங்கிகொண்டிருந்தான். இந்த அமைதியான மனதிற்குள் சற்று நேரத்திற்கு முன் ஒரு புயலே அடித்து ஓய்ந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தேன்.

மறுநாள் எழுந்த உடன் என்னிடம் இன்றைய கதையை விரிவாக சொல்ல ஓடிவருவான் என்று எனக்கு தெரியும்.

5 வயதே ஆகியிருந்தாலும், தனக்கு ஏதோ ஆபத்து வந்திருப்பதாக அவன் உணர்ந்த சமயம் யோசித்து, பின் கதவை அடைப்பது, தொலைபேசியில் பெற்றோரை தொடர்பு கொள்வது போன்ற அதற்கான நடவடிக்கைகளை  எடுத்திருக்கிறான் என்று அறியும்போது பெருமையாக இருந்தது.

அதே சமயம் தனக்கு ஆபத்து என்று அறிந்து அப்பா உதவுவார் என்று என்னை தொலைபேசி வழியாக அழைத்திருக்கிறான். அந்த அழைப்பை நான் துண்டித்திருக்கிறேன் என்று  நினைக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஒரு குற்றவுணர்வு தோன்றி மனதை பிசைந்து செல்வதை தவிர்க்கமுடியவில்லை.

Sunday, June 7, 2015

ஆஸ்திரேலிய தமிழ் அமைப்புகளிடம் நிலவும் Proxy வாக்குகள் என்ற நச்சுக் கலாச்சாரம்.


ஆஸ்திரேலியாவில் கடந்த 5 வருடத்தில் சில தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி அனுபவத்தில் நான் பார்த்த ஒரு நச்சுக் கலாச்சாரம் இந்த புராக்சி வாக்குகள் என்ற விசயம்.

proxy வாக்கு என்றால் என்ன ?
ஒரு அமைப்பில் உறுப்பிணராக உள்ளவர் ஆண்டு கூட்டத்திற்கு வரமுடியாமல் போனால் அவர் வாக்கை இன்னொருவர் செலுத்த அனுமதியளிக்கும் ஒரு படிவம். இதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு நல்ல விசயமாகவே படும். அதற்காகத் தான் அரசாங்கம் இதை அனுமதித்திருக்கிறது என்று நம்புகிறேன்.

ஆனால் இதை எவ்வாறு தவறாக நம் அமைப்புகள் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.

ஒரு அமைப்பில் 40 உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று வைத்துக்கொள்வோம். 40ல் சுமார் 20 உறுப்பினர்கள்தான் ஆர்வமுள்ளவர்களாக இருந்து கண்டிப்பாக கூட்டத்திற்கு வருவார் என்ற நிலையிருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவர் தலைவராக வேண்டும் என்று நினைக்கிறார் என்று வைத்ததுக்கொள்வோம். அவருக்குத் தேவை 20+ வாக்குகள்.
தலைவராக ஆசைப்படும் நபர் வரமாட்டார்கள் என்று நினைக்கும் 20+ நபர்களிடம் புராக்சி படிவங்களை வாங்கிக் கொண்டு வர முடியும். மேலும் விபரமானவராக இருந்தால் அமைப்பில் எந்த பங்கும் எடுக்க விரும்பாத சிலரிடம் பேசி,
சந்தா பணத்தை மட்டும் செலுத்துங்கள் நீங்கள் கூட்டத்திற்கே வரதேவையில்லை என்று கூறி இன்னும் 10 உறுப்பினர்களை பெயரளவில் சேர்க்க முடியும். புதியதாக சேர்க்கப்பட்டவர்களிடமும் 10 proxy படிவங்களை பெற்று வர முடியும்.
இப்படி தேர்தல் வேலைகளை செவ்வனே முடித்து, ஆண்டுக் கூட்டம் நடைபெறும் தினத்தன்று 30 proxy படிவங்களுடன் வெற்றி நிச்சயம் என்று தலைவராக ஆசைப்படுபவர் கூட்டத்திற்கு வருவார்.
தங்கள் நேரத்தினை செலவு செய்து வரும் உண்மையான சங்கத்தின் மேல் ஆர்வமுள்ளவர்களும் ஒரு 20 பேர் கூட்டத்திற்கு வந்திருப்பார்கள்.
கூட்டத்திற்கு வந்த அனைவரும் தலைவராக இருப்பவர்க்கு எதிராக எதிராக வாக்களித்தாலும், தலைவர் 30 proxy வாக்குகளை வைத்து "மாபெரும் வெற்றி" பெற்றுவிடுவார்.
கூட்டத்திற்கு வந்த ஆர்வலர்கள் 20 பேரும் வெறுப்படைந்து அமைப்பில் பணியாற்றுவதை நிறுத்திவிடுவர்.
அடுத்த வருடமும் இந்த போட்டி நடக்கும். இந்த முறை வேறு ஒரு "தலைவர்" proxy vote தேர்தலுக்கு பல நாள் முன்பிருந்தே வேட்டையில் இறங்குவார்.
இதுதான் இங்கு பல தமிழ் அமைப்புகளில் தொடர் கதையாக தமிழ் அமைப்புகளில் நடக்கிறது. நல்ல மனிதர்களை தமிழ் அமைப்புகள் இப்படித்தான் இழக்கின்றன.
இனி யாராவது ஒரு அமைப்பு தேர்தலில் ஜெயித்தேன் என்று சொன்னால், எத்தனை புராக்சி வோட்டு, எத்தனை உண்மையான ஓட்டு வாங்கினீங்க என்று தைரியமாக கேளுங்கள்.

தமிழ் அமைப்புகள் மக்களாட்சி தத்துவத்தை உண்மையாக மதித்து நடக்கவேண்டும் என்று நினைத்தால் இந்த proxy voting முறையை தங்கள் யாப்பிலிருந்து(constitution) உடனே நீக்கவேண்டும். அல்லது குடும்ப உறுப்பிணர்களுக்கு (கணவன் அல்லது மனைவி) மட்டும் proxy வாக்கை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்பது என் கருத்து.

இந்த சம்மந்தமாக உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.

Friday, May 15, 2015

ஆஸ்திரேலியாவில் தீப்பிடிப்பு சம்பவங்கள்

நான் சிறு பையனாக இருக்கும்போது எங்க ஊரில் பல வீடுகள் கூரை வீடுகள்தான் (எங்க வீடு உட்பட) .  அப்போது ஊரில் எங்காவது அவ்வப்போது வீடு தீக்கிரையாகும் துயர சம்பவம் நடக்கும். அப்படிப்பட்ட  கொடூர சம்பவத்தில் சிக்கிய மக்கள் அனைத்து உடைமைகளும் கணநேரத்தில் இழந்துவிடும் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். கிட்டதட்ட இறந்தவீட்டுக்கு செல்வது போல் ஊர் மக்கள் துக்கம் விசாரிப்பர். அப்படிபட்ட அனுபவங்களால் எனக்கு தீச்சம்பவங்கள் மிகுந்த வேதனையை கொடுக்கக் கூடியது.  தற்போது ஊரில் பெரும்பாலானோரின் வீடுகள் அவரவர் வசதிக்கேற்ப தீப்பிடிக்காத கான்ங்கிரீட்  வீடுகளாக உருமாறியிருப்பது நல்ல விசயம்

ஆனால் இங்கு ஆஸ்திரேலியாவில் அடிக்கடி தீப்பிடிப்பு சம்பவங்களை பார்க்க வேதனையாக உள்ளது.  அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை, ஒருவேளை இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தினால் கட்டப்பட்டிருபதாகக் கூட இருக்கலாம்.

நேற்றும் இங்கு பிரிஸ்பேனில் ஒரு வீடு தீப்பிடித்ததில் ஒரு 2 வயது குழந்தை தன் பிறந்த நாள் அன்றே இறந்த துக்க செய்தி இங்கே...

http://www.news.com.au/national/father-tried-to-save-son-2-from-birthday-blaze-at-beenleigh/story-e6frfkp9-1227355675832

Thursday, April 23, 2015

முகிலின் ANZAC நாள் விருப்பம்

நேற்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சென்றவுடன், என் 6 வயது மகன் முகில் ஓடிவந்து ஏன் அப்பா நீங்க மிலிட்டரில சேரல என்றான். ஏன்  கேட்கிற என்றேன்.

உங்க கூட ஸ்கூல் படிச்சவங்க சில பேரு மிலிட்டரிக்கு போனதா அம்மா சொன்னாங்க.  நீங்ககூட உங்க ஸ்கூல் பிரன்டு ஒருத்தரு மிலிட்டரிக்கு போய் இறந்துட்டாருன்னு முன்னாடி  சொன்னீங்க என்றான்.

நான் அதற்கு, ஆமா, ஆனா எனக்கு மிலிட்டரிக்குப் போக பிடிக்கல அதனால போகல. சரி இந்த கேள்வி ஏன் இப்ப கேக்கறேன்னு சொல்லு என்றேன்.

இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆன்சாக் டே(ANZAC day) பத்தி எங்க டீச்சர் பேசினாங்க ஒரு புத்தகத்தையும் படிச்சி காட்டினாங்க.  அப்பரம் என்னோட பிரன்ட்ஸ் சில பேரு அவங்க குடும்பத்திலயிருந்து, தாத்தா, தாத்தவோட அப்பா என்று மிலிட்டரில இருந்தவங்கள பத்தி சொன்னாங்க.  அவங்க சண்டைக்கு போனதுபற்றியும்  சொன்னாங்க. என்னோட கிளாஸ்ல இருக்கிற இன்னோரு பையனோட அம்மா ஏர்போர்ஸ்ல இருக்காங்க.  அவங்க அவன அழைச்சிட்டு போக வரும்போது அந்த யூனிபார்ம்ல வருவாங்க.
எனக்கு யாரும் நம்ம குடும்பத்தில மிலிட்டரில இல்லை என்றான் மூஞ்சிய சோகமா வச்சிக்கிட்டு.

நம்ம பேமில யாரும் மிலிட்டரில இல்லாதனால நீ பெரியவனாகி ஆஸ்திரேலிய மிலிட்டரில சேருவதற்கு முயற்சி செய் என்றேன்.

கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு நான் போக மாட்டேன் ஏன்னா சண்டை வந்திச்சின்னா துப்பாக்கில சுடுவாங்க என்று சொல்லிட்டு ஓடிட்டான்.

Thursday, October 9, 2014

இராவண காவியம்

கதைக்கு கால் இல்லை என்பார்கள். இது காப்பியம், புராணம் போன்ற பெரும் கதைகளுக்கும் பொருந்தும்.

அதே சமயம், ஒவ்வோரு கதையிலுல் ஒரு அரசியல் உள்ளிருக்கும். கதையைப் படிக்கும் போது அதன் பின்னனியில் இருக்கும் அரசியலையும் புரிந்து கொண்டு படிக்கவேண்டும். நாம் சார்ந்திருக்கும் ஒரு குழுவையோ அல்லது நாம் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தையோ இழிவு செய்யும் கதைகளை அடையாளம் கண்டு கொண்டு அந்த புரிதல் அவசியும்.

இந்திய துனைக்கண்டத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான புராணங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் அடிநாதமாக இருப்பது ஆரிய திராவிட இனப்போராட்டம்தான். நம்பவில்லை என்றால் இந்த கண்ணோட்டத்தை வைத்துக்கொண்டு ஒவ்வோரு கதையையும் படித்தப் பாருங்கள்.

உதாரணத்திற்கு இராமாயணத்தை எடுத்துக்கொள்ளுங்கள், இதில் வடக்கே இருக்கும் ஆரியர்களுக்கும்(இராமன் குழு) தெற்கே இருக்கும் திராவிட குழுவிற்கும்(இராவணன் குழு) நடக்கும் போராட்டம்தான்.

நம் இனத்தை வெற்றி கொண்டு பெருமைப்படும் ஒரு காப்பியத்தை தமிழன் படிக்கும் போது கோபம் தானே வரவேண்டும். ஆனால் தன் இனத்தின் தோல்விக்காவியத்தை படித்து சுவைத்தக்கொண்டிருக்கிறான் தமிழன்!!!

கம்பனின் தமிழ் புலமைக்காக படிக்கிறேன் என்று சிலர் சொல்லலாம். படியுங்கள், தமிழ் சுவையை ரசியுங்கள் ஆனால் இந்த கதையின் பின்புலத்தில் இருக்கும் அரசியலையும் கவனித்தில் கொண்டு படியுங்கள்.

என்ன செய்வது, இராமாயானத்தை தமிழ் எழுத கம்பனை ஸ்பான்சர் செய்த சடையப்ப வள்ளலுக்கு இந்த அரசியல் புரியாமல் போய்விட்டது. அவருக்கு புரிந்திருந்தால், நம் இனத்தலைவனாகிய இராவணனை முன்னிலைப்படுத்தி கம்பனை காவியம் எழுத வைத்திருப்பார்.

அந்த குறை புலவர் குழந்தை அவர்களால் ஓரளவிற்கு தீர்க்கப்பட்டது. புலவர் குழந்தை இராவண காவியத்தை எழுதினார்.

இதோ அதன் விபரம் http://ta.wikipedia.org/s/ch3

இராவண காவியம் ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.

இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார். இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது. இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் தேதி தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.


இராவண காவியம் தமிழ் இணையக் கல்விக்கழகத்திலும் ஒரு பாடமாக வைத்திருக்கிறார்கள்; http://www.tamilvu.org/courses/degree/a011/a0114/html/A0114331.htm

தமிழர்களே இராமாயண கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க நினைப்போர், அதற்குப் பதிலாக இராவணகாவியத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க முயற்ச்சிப்போம். இராவணகாவியத்தை கார்ட்டூன் வடிவில் கொண்டுவரவேண்டும்.
இராவண காவியத்தைப் பற்றி சொற்பொழிவாற்றி தமிழரிடையே பரப்ப தமிழறிஞர்கள் முன்வரவேண்டும்.


Monday, September 1, 2014

பகுத்தறிவு மாதம் பிறந்துவிட்டது!

நண்பர்களே பகுத்தறிவு மாதம் பிறந்துவிட்டது.

தமிழரிடைய பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பிய பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடுவோம். இந்த மாதம் முழுதும் பகுத்தறிவு கருத்துக்களை பற்றி சிந்திப்போம். இதில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் சமூக வலைத்தள பதிவுகளுக்கு #paguththarivumaadham என்ற hastagஐ பயன்படுத்தவும்.

பெரியார் சொல்லிவிட்டதால் அவர் சொல்வதனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை. அவர் கருத்துக்களை தராளமாக விமர்சனம் செய்யுங்கள். பெரியார் மட்டுமல்ல எந்த ஒரு அறிஞரும் சொன்ன கருத்துக்களை 100% ஏற்றுக்கொள்ள முடியாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற குறள் சொல்வதுபோல் நாம் நம் அறிவைப் பயன்படுத்தி உண்மையை பகுத்தறியவேண்டும்.

ஏன் உலகப்பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறளிலேயே விமர்சிக்கப் படவேண்டி விசயங்கள் உள்ளன். திருக்குறளில் உள்ள பெண்ணடிமை கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்ளுங்கள் அவரிடம் விமர்ச்சிப்படவேண்டிய விசயங்கள் பல உள்ளன. அதற்காக காந்தியாரின் தியாகத்தையும், அகிம்சை கொள்கையையும் போற்றாமல் இருக்க முடியாது.

நமக்கு சொல்லப்படுகிற விசயங்களை நம் அறிவு கொண்டு ஆய்ந்து சரி என்று நமக்குப்படுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பகுத்தறிவு. இது தான் மனித இனத்திற்குத் தற்போதைய தேவை. ஒரு நிமிடம் உலகில் இதுவரை நடந்த கொடுமைகள், மற்றும் தற்போது நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் நினைத்துப்பாருங்கள்.
அவை எல்லாம் ஒருவகையில் மனிதன் பகுத்தறிவை இழந்ததால் சில மூடக்கருத்துக்களை கேள்வி கேட்காமல் ஏற்றதால் நிகழ்ந்த கொடுமைகளாகத்தான் இருக்கும்.  மனிதகுலம் அறிவார்ந்த சமூதாயமாக மாறும் போது அமைதியான சமூகமாக மாறும். சிந்தியுங்கள் நண்பர்களே.

பகுத்தறிவு மாத சிந்தனையை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உரையோடு தொடங்குவோம். மரபு சார்ந்த விசயங்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி கேட்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒரு தமிழச்சி சொல்வதை கேளுங்கள்.

Thursday, August 21, 2014

செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடுவோம்.

தமிழ்நாட்டிலுள்ளவர்களைவிட வெளிநாட்டில் வாழும் தமிழர் அதிகம் மூடநம்பிக்கைகளுடன் இருப்பதாக எனக்குப் படுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா என்று புரியவில்லை.

ஜோசியர்களுக்கும், வாஸ்து பார்ப்போருக்கும், சாமியார்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடையே நல்ல வரவேற்பு(மற்றும் வசூல்) இருப்பதாக தெரிகிறது.

மீண்டும் சாதிப் பெயர்களை பெயருக்கு பின் போட்டுக்கொள்வதும் தமிழரிடையே அதிகரித்துள்ளது. இந்த சாதிப் பெயர் நீக்கும் சமூகப் புரட்சியை தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி சாதித்தோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை தமிழரிடையே குறிப்பாக, வெளிநாட்டு தமிழரிடையே தொடர்ந்து பரப்பவேண்டிய அவசியம் இருக்கிறது.
பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடினால் என்ன?

செப்டம்பர் மாதம் முழுதும் சமூக இணையத்தளங்கள் வழியாகவும், மற்ற நிகழ்ச்சிகள் வழியாகவும் தமிழர் அனைவரும் பகுத்தறிவு கருத்துக்களை பற்றி விவாதிக்கலாமா?

இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் பெரியாரின் கருத்துக்களை தினிப்பது அல்ல. பெரியாரே அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை.

பெரியார் என்றாலே இறை மறுப்பாளர் என்ற கருத்தை மட்டும் புரிந்துகொண்டுள்ளோர்தான் அதிகம். ஆனால் சாதி ஒழிப்பு, சமத்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ் உணர்வு போன்ற பல முற்போக்கு விசயங்களுக்காக போராடியவர் பெரியார்.

 இங்கு வெளிநாடுகளில் பெரியார் பற்றியும் , திராவிட இயக்கத்தைப் பற்றியும் தெரியாமலே ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. பெரியார் என்ற ஒரு மாமனிதர் வாழ்ந்தார், அவரின் கொள்கைகள் இவை, அவர் உழைப்பால் தமிழ் சமூகத்து இந்த நன்மைகள்(அல்லது தீமை) வந்தது என்றாவது, வெளிநாடுகளில் வாழும் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இதை ஒரு அறிவுப்பூர்வமான விவாதமாக செய்வோம். ஆத்திகர்களும், மத ஆதரவாளர்களும் தங்கள் பிரச்சாரங்களை தங்கு தடையின்றி செய்யும்போது, நாம் கொஞ்சம் பகுத்தறிவு கொள்கைகளையும் சொல்லிவைப்போமே!

மக்கள் அவர்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் சரி என்று படுவதை ஏற்றுக்கொள்ளட்டும். இல்லை என்றால் விட்டுவிடட்டும்.