Monday, November 14, 2016

முதல் அழைப்பு

20 பேர் அமரக்கூடிய அறை அது.  நாங்கள் சுமார் 12 பேர் 'ப' வடிவிலுள்ள ஒரு மேசைக்குப் பின் அமர்ந்து பேச்சாளரின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தோம். இது நடந்தது 2014ஆம் வருடத்தின் பிற்பகுதியில்.

ஸ்பிரிங்ஃபீல்டு லேக்ஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் என்றழைக்கப்படும் பேச்சாளர்கள் சங்கத்தின் மாதமிருமுறை நடக்கும் அமர்வுதான் அன்று நடந்து கொண்டிருந்தது.

பேச்சுக்கலையை வளர்த்துக்கொள்ள விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளவை இந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் சங்கங்கள். (இந்த சங்கங்கள்பற்றி அறிந்து கொள்ள இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும் https://www.toastmasters.org/ )

எங்க வீட்டருகே ஒரு டோஸ்ட்மாஸ்டர்ஸ் சங்கம் இருந்ததால் எனக்கு வசதியாக இருந்ததது. நான் அவர்கள் கூட்டத்திற்கு அவ்வப்போது செல்வதுண்டு. வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது புதன்கிழமைகளில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும். இரவு 9:00 மணிக்கு கூட்டம் முடிவுற்றாலும், அதன் பிறகு பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு வர 10 மணியாகும். பெரும்பாலும் நான் வீட்டுக்கு வரும்போது என்னுடைய 5 வயது மகன் தூங்கியிருப்பான்.

அன்று பேசிய பேச்சாளர் எந்த தலைப்பில் உரை நிகழ்த்தினார் என்று நினைவில்லை ஆனால் வழக்கம்போல் நான் உரையில் லயித்திருந்திருந்தேன். என்னுடைய மொபைல் போன் அமைதியாக எனக்கு முன் மேசையில் லேசாக ஒளிர்ந்து எனக்கு உள்வரும் அழைப்பைப் பற்றி உணர்த்தியது. யாரென்று பார்த்தேன். அழைப்பு வீட்டிலிருந்து என்று அறிந்தேன்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் கூட்டத்திலிருக்கும்போது போன் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். அப்படியிருந்தும் ஏன் மனைவி அழைத்தார் என்று எண்ணியவாறே, அப்போதைக்கு அழைப்பை துண்டித்துவிட்டு, சற்று நேரம் கழித்து பேச்சு முடிந்தவுடன், என்ன விசயம் ஏன் அழைத்தாய் என்று மனைவிக்கு வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பினேன். சற்று நேரத்தில் ஒன்றுமில்லை நீங்கள் மீட்டிங் முடித்துவிட்டு பிறகு சொல்கிறேன் என்று பதில் வந்தது.

அதன் பிறகு அதைப்பற்றி ஒன்றும்  யோசிக்காமல் கூட்டம் முடிந்து வீட்டுக்கு வழக்கம் போல் 10 மணி வாக்கில் சென்றடைந்தேன்.

மீட்டிங்கில் இருக்கும்போது எதற்கு அழைத்தாய் என்று மனைவிடம் விசாரித்தேன். அதற்கு அந்த தொலைபேசி அழைப்பை செய்தது முகில் என்றார். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முகில் இன்னும் தொலைபேசி பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. எப்படி தொலைபேசியை உபயோகிக்க வேண்டும் என்று ஒருமுறை நாங்கள் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ஆனால் அதன் பிறகு அவன் அதை பயன்படுத்தியதே இல்லை. அப்படி இருக்க ஏன் என்னை அழைத்தான் ?

என்ன நடந்தது என்றால்...
 வழக்கம் போல் 7 மணிக்கு எல்லால் முகில் சாப்பிட்டுவிட்டு பல் துலக்கிவிட்டு தூங்க சென்றுவிடுவது வழக்கம். அதே போல் அன்று பல் துலக்க சென்றிருக்கிறார். அப்போது என் மனைவி, பக்கத்துவீட்டில் சில பாத்திரங்களை கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அம்மா சொன்னதை முகில் கவனிக்கவில்லை.

எங்க பக்கத்துவீட்டில் குடியிருப்பவர்களும் இந்தியர்கள்தான். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு நன்றாக தெரியும். இங்கு ஆஸ்திரேலியாவில் பக்கத்து வீட்டில் தமிழ் தெரிந்தவர்கள் எங்களுக்கு கிடைத்தது பலவகையில் உதவியாக இருக்கிறது. அவ்வப்போது அவர்கள் வீட்டிலிருந்து பிசிபேளா பாத் போன்ற கர்நாடக சாப்பாடும் எங்க வீட்டிலிருந்து இட்லி, பொங்கல் குழிப்பணியாரம் போன்ற தமிழ் சாப்பாடும் பறிமாறப்படும் ;)  அப்போது என் மனைவி கருவுற்றிருந்ததால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பக்கத்து வீட்டு சமையல் எங்க வீட்டிற்கு வந்து கொண்டிருந்தது.

மனைவி உணவு பாத்திரங்களை கொடுத்துவிட்டு உடனே திரும்பவேண்டும் என்ற நோக்கத்தில் சென்றவர், அவர்கள் ஏதோ முக்கிய விசயம் பற்றி கேட்க பதில் சொல்லிவிட்டு வர சற்று கால தாமதமாகிவிட்டிருக்கிறது. அதுவும் சுமார் 10 நிமிடம்தான் இருக்கும் என்றார்.

அதற்குள் முகில் பல் துலக்கிவிட்டு குளியலைவிட்டு வெளியே வந்திருக்கிறான். அம்மா பக்கத்து வீட்டுக்கு சென்றிருப்பதை பற்றி தெரியாமல், அம்மாவை கூப்பிட்டிருக்கிறான். பதில் வரவில்லை என்றவுடன் வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்திருக்கிறான்.

அம்மாவை  காணவில்லை என்று அறிந்து பயந்துவிட்டான்.  முதல் வேலையாக பின் கதவை சென்று பூட்டிவிட்டு வந்துவிட்டான். முன் கதவு ஏற்கனவே மனைவி சாத்திவிட்டு சென்றிருக்கிறார்.  ஏற்கனவே எங்கள் இருவர் தொலைபேசி எண்களை ஒரு தாளில் எழுதி அவனுக்கு தெரியும் இடத்தில் நாங்கள் வைத்திருக்கிறோம். அதேபோல் தொலைபேசி எண்களை அவனுடைய பள்ளி புத்தகப் பையிலும் வைத்திருக்கிறோம்.

உடனே தொலைபேசி எண்கள் எழுதிய தாளை எடுத்து வீட்டுத் தொலைபேசியின் வழியாக அம்மாவின் எண்ணுக்கு ஒவ்வொரு பொத்தானாக அமுக்கி அழைத்திருக்கிறான். ஆனால் அம்மாவின் தொலைபேசியின் அழைப்பு ஒலி வீட்டிற்குள்ளே இருந்து வந்திருக்கிறது.

அம்மா தொலைபேசி வீட்டிலேயே இருந்ததால் என்னுடைய தொலைபேசி எண்ணை ஒவ்வொன்றாக அமுக்கி அழைத்திருக்கிறான். அப்படி அழைத்த அவன் முதன் அழைப்பைத்தான் நான் டோஸ்ட்மாஸ்டர்ஸ் மீட்டிங்கில் இருக்கும் போது துண்டித்திருக்கிறேன்.

பிறகு என்ன செய்வதென்று அறியாமல் வீட்டிற்குள்ளேயே தனியாக அழ ஆரம்பித்திருக்கிறான்.  சற்று நேரத்திற்குள் என் மனைவி வீட்டிற்கு வந்துவிட்டார். அவனை சமாதானம் செய்து தூங்க வைத்திருக்கிறார்.

ஏன் பின் கதவுகளை பூட்டினாய் என்ற மனைவி கேட்டிருக்கிறாள் அதற்கு மோசமான ஆளுங்க பின் கதவு வழியாக வந்துவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறான்.

இந்த விசயத்தை மனைவிடம் கேட்டுவிட்டு மகன் அறையின் கதவை சற்று திறந்து பார்த்தேன். அமைதியாக ஒருக்களித்துபடுத்து தூங்கிகொண்டிருந்தான். இந்த அமைதியான மனதிற்குள் சற்று நேரத்திற்கு முன் ஒரு புயலே அடித்து ஓய்ந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தேன்.

மறுநாள் எழுந்த உடன் என்னிடம் இன்றைய கதையை விரிவாக சொல்ல ஓடிவருவான் என்று எனக்கு தெரியும்.

5 வயதே ஆகியிருந்தாலும், தனக்கு ஏதோ ஆபத்து வந்திருப்பதாக அவன் உணர்ந்த சமயம் யோசித்து, பின் கதவை அடைப்பது, தொலைபேசியில் பெற்றோரை தொடர்பு கொள்வது போன்ற அதற்கான நடவடிக்கைகளை  எடுத்திருக்கிறான் என்று அறியும்போது பெருமையாக இருந்தது.

அதே சமயம் தனக்கு ஆபத்து என்று அறிந்து அப்பா உதவுவார் என்று என்னை தொலைபேசி வழியாக அழைத்திருக்கிறான். அந்த அழைப்பை நான் துண்டித்திருக்கிறேன் என்று  நினைக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஒரு குற்றவுணர்வு தோன்றி மனதை பிசைந்து செல்வதை தவிர்க்கமுடியவில்லை.

No comments:

Post a Comment