Sunday, June 7, 2015

ஆஸ்திரேலிய தமிழ் அமைப்புகளிடம் நிலவும் Proxy வாக்குகள் என்ற நச்சுக் கலாச்சாரம்.


ஆஸ்திரேலியாவில் கடந்த 5 வருடத்தில் சில தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி அனுபவத்தில் நான் பார்த்த ஒரு நச்சுக் கலாச்சாரம் இந்த புராக்சி வாக்குகள் என்ற விசயம்.

proxy வாக்கு என்றால் என்ன ?
ஒரு அமைப்பில் உறுப்பிணராக உள்ளவர் ஆண்டு கூட்டத்திற்கு வரமுடியாமல் போனால் அவர் வாக்கை இன்னொருவர் செலுத்த அனுமதியளிக்கும் ஒரு படிவம். இதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு நல்ல விசயமாகவே படும். அதற்காகத் தான் அரசாங்கம் இதை அனுமதித்திருக்கிறது என்று நம்புகிறேன்.

ஆனால் இதை எவ்வாறு தவறாக நம் அமைப்புகள் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.

ஒரு அமைப்பில் 40 உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று வைத்துக்கொள்வோம். 40ல் சுமார் 20 உறுப்பினர்கள்தான் ஆர்வமுள்ளவர்களாக இருந்து கண்டிப்பாக கூட்டத்திற்கு வருவார் என்ற நிலையிருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவர் தலைவராக வேண்டும் என்று நினைக்கிறார் என்று வைத்ததுக்கொள்வோம். அவருக்குத் தேவை 20+ வாக்குகள்.
தலைவராக ஆசைப்படும் நபர் வரமாட்டார்கள் என்று நினைக்கும் 20+ நபர்களிடம் புராக்சி படிவங்களை வாங்கிக் கொண்டு வர முடியும். மேலும் விபரமானவராக இருந்தால் அமைப்பில் எந்த பங்கும் எடுக்க விரும்பாத சிலரிடம் பேசி,
சந்தா பணத்தை மட்டும் செலுத்துங்கள் நீங்கள் கூட்டத்திற்கே வரதேவையில்லை என்று கூறி இன்னும் 10 உறுப்பினர்களை பெயரளவில் சேர்க்க முடியும். புதியதாக சேர்க்கப்பட்டவர்களிடமும் 10 proxy படிவங்களை பெற்று வர முடியும்.
இப்படி தேர்தல் வேலைகளை செவ்வனே முடித்து, ஆண்டுக் கூட்டம் நடைபெறும் தினத்தன்று 30 proxy படிவங்களுடன் வெற்றி நிச்சயம் என்று தலைவராக ஆசைப்படுபவர் கூட்டத்திற்கு வருவார்.
தங்கள் நேரத்தினை செலவு செய்து வரும் உண்மையான சங்கத்தின் மேல் ஆர்வமுள்ளவர்களும் ஒரு 20 பேர் கூட்டத்திற்கு வந்திருப்பார்கள்.
கூட்டத்திற்கு வந்த அனைவரும் தலைவராக இருப்பவர்க்கு எதிராக எதிராக வாக்களித்தாலும், தலைவர் 30 proxy வாக்குகளை வைத்து "மாபெரும் வெற்றி" பெற்றுவிடுவார்.
கூட்டத்திற்கு வந்த ஆர்வலர்கள் 20 பேரும் வெறுப்படைந்து அமைப்பில் பணியாற்றுவதை நிறுத்திவிடுவர்.
அடுத்த வருடமும் இந்த போட்டி நடக்கும். இந்த முறை வேறு ஒரு "தலைவர்" proxy vote தேர்தலுக்கு பல நாள் முன்பிருந்தே வேட்டையில் இறங்குவார்.
இதுதான் இங்கு பல தமிழ் அமைப்புகளில் தொடர் கதையாக தமிழ் அமைப்புகளில் நடக்கிறது. நல்ல மனிதர்களை தமிழ் அமைப்புகள் இப்படித்தான் இழக்கின்றன.
இனி யாராவது ஒரு அமைப்பு தேர்தலில் ஜெயித்தேன் என்று சொன்னால், எத்தனை புராக்சி வோட்டு, எத்தனை உண்மையான ஓட்டு வாங்கினீங்க என்று தைரியமாக கேளுங்கள்.

தமிழ் அமைப்புகள் மக்களாட்சி தத்துவத்தை உண்மையாக மதித்து நடக்கவேண்டும் என்று நினைத்தால் இந்த proxy voting முறையை தங்கள் யாப்பிலிருந்து(constitution) உடனே நீக்கவேண்டும். அல்லது குடும்ப உறுப்பிணர்களுக்கு (கணவன் அல்லது மனைவி) மட்டும் proxy வாக்கை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்பது என் கருத்து.

இந்த சம்மந்தமாக உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.

Friday, May 15, 2015

ஆஸ்திரேலியாவில் தீப்பிடிப்பு சம்பவங்கள்

நான் சிறு பையனாக இருக்கும்போது எங்க ஊரில் பல வீடுகள் கூரை வீடுகள்தான் (எங்க வீடு உட்பட) .  அப்போது ஊரில் எங்காவது அவ்வப்போது வீடு தீக்கிரையாகும் துயர சம்பவம் நடக்கும். அப்படிப்பட்ட  கொடூர சம்பவத்தில் சிக்கிய மக்கள் அனைத்து உடைமைகளும் கணநேரத்தில் இழந்துவிடும் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். கிட்டதட்ட இறந்தவீட்டுக்கு செல்வது போல் ஊர் மக்கள் துக்கம் விசாரிப்பர். அப்படிபட்ட அனுபவங்களால் எனக்கு தீச்சம்பவங்கள் மிகுந்த வேதனையை கொடுக்கக் கூடியது.  தற்போது ஊரில் பெரும்பாலானோரின் வீடுகள் அவரவர் வசதிக்கேற்ப தீப்பிடிக்காத கான்ங்கிரீட்  வீடுகளாக உருமாறியிருப்பது நல்ல விசயம்

ஆனால் இங்கு ஆஸ்திரேலியாவில் அடிக்கடி தீப்பிடிப்பு சம்பவங்களை பார்க்க வேதனையாக உள்ளது.  அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை, ஒருவேளை இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தினால் கட்டப்பட்டிருபதாகக் கூட இருக்கலாம்.

நேற்றும் இங்கு பிரிஸ்பேனில் ஒரு வீடு தீப்பிடித்ததில் ஒரு 2 வயது குழந்தை தன் பிறந்த நாள் அன்றே இறந்த துக்க செய்தி இங்கே...

http://www.news.com.au/national/father-tried-to-save-son-2-from-birthday-blaze-at-beenleigh/story-e6frfkp9-1227355675832

Thursday, April 23, 2015

முகிலின் ANZAC நாள் விருப்பம்

நேற்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சென்றவுடன், என் 6 வயது மகன் முகில் ஓடிவந்து ஏன் அப்பா நீங்க மிலிட்டரில சேரல என்றான். ஏன்  கேட்கிற என்றேன்.

உங்க கூட ஸ்கூல் படிச்சவங்க சில பேரு மிலிட்டரிக்கு போனதா அம்மா சொன்னாங்க.  நீங்ககூட உங்க ஸ்கூல் பிரன்டு ஒருத்தரு மிலிட்டரிக்கு போய் இறந்துட்டாருன்னு முன்னாடி  சொன்னீங்க என்றான்.

நான் அதற்கு, ஆமா, ஆனா எனக்கு மிலிட்டரிக்குப் போக பிடிக்கல அதனால போகல. சரி இந்த கேள்வி ஏன் இப்ப கேக்கறேன்னு சொல்லு என்றேன்.

இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆன்சாக் டே(ANZAC day) பத்தி எங்க டீச்சர் பேசினாங்க ஒரு புத்தகத்தையும் படிச்சி காட்டினாங்க.  அப்பரம் என்னோட பிரன்ட்ஸ் சில பேரு அவங்க குடும்பத்திலயிருந்து, தாத்தா, தாத்தவோட அப்பா என்று மிலிட்டரில இருந்தவங்கள பத்தி சொன்னாங்க.  அவங்க சண்டைக்கு போனதுபற்றியும்  சொன்னாங்க. என்னோட கிளாஸ்ல இருக்கிற இன்னோரு பையனோட அம்மா ஏர்போர்ஸ்ல இருக்காங்க.  அவங்க அவன அழைச்சிட்டு போக வரும்போது அந்த யூனிபார்ம்ல வருவாங்க.
எனக்கு யாரும் நம்ம குடும்பத்தில மிலிட்டரில இல்லை என்றான் மூஞ்சிய சோகமா வச்சிக்கிட்டு.

நம்ம பேமில யாரும் மிலிட்டரில இல்லாதனால நீ பெரியவனாகி ஆஸ்திரேலிய மிலிட்டரில சேருவதற்கு முயற்சி செய் என்றேன்.

கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு நான் போக மாட்டேன் ஏன்னா சண்டை வந்திச்சின்னா துப்பாக்கில சுடுவாங்க என்று சொல்லிட்டு ஓடிட்டான்.